Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை.
அதற்கு காரணம் தமிழகத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது இல்லை. அதோடு, பாஜக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை கொடுப்போம் என மத்திய அமைச்சர் சொன்னார்.
இந்நிலையில், புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ‘தமிழ்நாட்டுக்கு பல மடங்கு நிதி அதிகமாக வழங்கிவிட்டோம். ஆனால் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்’ என திமுகவை மறைமுகமாக சொன்னார். ஆனால், இதே மோடி 2012ம் வருடம் குஜராத்தின் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தது. அப்போது நிதி விஷயத்தில் கருத்து சொன்ன மோடி ‘குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் பிச்சைக்காரர்களா?.. டெல்லியின் கருணையால் நாங்கள் வாழ்கிறோமா?’ என கேள்வி கேட்டார். அதை இப்போது எடுத்துப்போட்டு ‘அது வேற வாய்.. இது வேற வாய்’ என திமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள்.