2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் தனியார் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே விமான மற்றும் பேருந்து கட்டணங்களின் அடிப்படையில் இந்த ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 105 வழித்தடங்களில் 159 தனியார் ரயில் சேவையை ரயில்வே துறை புதன்கிழமை அறிமுகம் செய்தது.
இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது,இந்த ரயில் சேவையை தனியாருக்கு அனுமதிப்பது தொழில்நுட்ப ரீதியில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.மேலும் இப்பொழுது 4000 கி.மீ இயக்கத்திற்கு பிறகு ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுவது இனி 40 ஆயிரம் கிலோமீட்டர் இயக்கத்திற்கு பிறகு பராமரிக்கப்படும் அதாவது மாதத்திற்கு இருமுறை மட்டுமே பராமரிப்பதாக இருக்கும்.
ரயில் சேவை தனியாருக்கு வழங்கப்படுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம்.இந்திய ரயில்வே சார்பில் 2,800 ரயில்கள் இயங்கி வருகின்றன.இதில் 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படும்.இந்த ரயில்கள் அனைத்தும் அவர்களாலேயே கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும்.மேலும் இந்த ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.
இந்த ரயில்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு உள்ளது.மேலும் இந்த ரயில் கட்டணங்கள் அனைத்தும் பேருந்து கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படும்.தனியாா் ரயில் சேவையை அளிப்பவா்கள், ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தவதன் காரணமாக மின் பயன்பாட்டுக்கட்டணம்,ரயில் பாதைக்கான இழுவைக் கட்டணம், ரயில்நிலைய பயன்பாட்டு கட்டணம் என்பன உள்ளிட்ட கட்டணங்களை ரயில்வேக்கு செலுத்த வேண்டும் என்பதோடு, வருவாயில் ஒரு பங்கையும் ரயில்வே துறைக்கு அளிக்க வேண்டும்.இந்த ரயில்களை தனியாருக்கு அனுமதிப்பதன் மூலம் பயணிகள் காத்திருப்பது என்பது குறைந்து தேவைக்கேற்ப ரயில் சேவையை அளிக்க முடியும்.90 சதவீத கால காலதாமதத்தை தனியார் ரயில் சேவைகள் தவிர்க்கும்.
மேலும் 1 லட்சம் கிலோ மீட்டர் இயக்கத்திற்கு ஒரு தவறு கூட பதிவாகாது.இந்த நிபந்தனைகளை பின்பற்ற தவறும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் தனியார் ரயில்களில் மின் பயன்பாட்டை கணக்கிட மின் மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார்.