காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்!

Photo of author

By Parthipan K

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்!

தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் தான் ஆட்சி புரிந்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் காங்கிரஸ் இழந்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு, ஏற்கனவே நடைபெற்ற பல மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக, பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸின் கைவசம் தற்போது இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. காங்கிரஸின் தொடர் தோல்வியை தொடர்ந்து அதன் தலைமை மீது கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களே குறை சொல்லி வருகின்றனர். இதற்கிடையே நடைபெற்ற காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸின் தலைமை மீது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தலைமையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இல்லத்தில் அக்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் நேற்றைய தினம் மட்டும் மூன்று முறை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் தலைமையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியின் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பூபிந்தர்சிங் ஹூடாவை, ராகுல் காந்தி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா குடும்பத்தினர் இல்லாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தியே தற்காலிக தலைவராக தொடர்வார் என கூறப்படுகிறது.