கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நினைவாற்றல் திறன் பாதிப்பு, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் பலர் நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, களைப்பு, குழப்பமான மனநிலை, கவனம் சிதறுதல் போன்ற தொந்தரவுகள் இருப்பதாக மருத்துவர்களை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிலர் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை நாடுவதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து சக்ரா உலக மருத்துவமனையின் மருத்துவர் டி.ஆர். ஹேம்கமார் கூறுகையில்,
40 வயதுடைய இரண்டு பேர் சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் கொரோனா தொற்று உறுதியாகும் முன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்ததாகவும், தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பிய பின் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர். சுறுசுறுப்பாக வேலை செய்வது, புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவற்றை ஆர்வத்துடன் எளிதாக செய்து வந்த அவர்களால், தற்போது எளிதாக படிக்கவும் எழுதவும் கூட முடியவில்லை என்கிறார் மருத்துவர்.
மேலும் இதுகுறித்து ஆர்.வி. மருத்துவமனை மருத்துவர் ஆஸ்தெர் கூறுகையில்,
கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிய சிலர், ஓரிரு மாதங்கள் கழித்து நினைவுத் திறன் பாதித்தல், மயக்கம், மனக்குழப்பம், அதிக சோர்வு போன்ற தொந்தரவுகள் காரணமாக மீண்டும் மருத்துவர்களை நாடி வருகிறார்கள். கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த சிலர், மூட்டுகளில் பலவீனம் ஏற்பட்டு நடக்க முடியாதது போன்ற காரணங்களால் கடந்த ஒரு சில வாரங்களில் அதிகமாக மருத்துவர்களை நாடி வருகிறார்கள்.
மேலும் இது குறித்து மருத்துவர் ஹம்குமார் கூறுகையில்,
கொரோனா வைரஸால் மூளையின் வடிவமைப்பு அல்லது செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார். மேலும் கொரோனா பாதிப்பின் போது உடலுக்குள் குறைவான ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ள நேரிடும். அப்போது மூளை திறனில் ஏற்படும் பாதிப்பால் கூட இவ்வித குறைபாடுகள் ஏற்படலாம் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் இதற்கென சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் தற்போதைக்கு சத்து மாத்திரைகள் மூலம் தீர்வு கண்டு வருகிறோம் என்கிறார்கள் பல மருத்துவர்கள். உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், இதற்கு சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் இந்த புதிய சிக்கல் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதும் சரியாகத் தெரியவில்லை என்கின்றனர். எனவே, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு கவனத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.