பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

Photo of author

By Savitha

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி, செயல்படுத்தியது. பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்துதல். ஷு, சாக்ஸ் வழங்குதல், நீட் தேர்விற்கு தயார் செய்யும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்தல் என, பல சிறப்பான திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.

இந்த நலத்திட்டங்களுக்கு மத்தியில், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு கட்டாய பொதுத் தேர்வு என்பது தான், மக்களிடம் சலசலப்பை உண்டு பண்ணியது. கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய போதும், இதில் கடுகளவும் மாற்றம் இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக, கூறிவிட்டார்.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காகவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்காகவும் இந்த பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால், இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வு எழுதலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுபள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக 1000 வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், திறமையை மேம்படுத்த 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் என்றும், அவை எளிமையாகவே இருக்கும் அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

தோல்வி பயம், தேர்வு பயம் போன்றவை தேவையற்றது என்றாலும் இந்த பொதுத் தேர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.