கட்டண கொள்ளையில் மின்சார வாரியம் – அதிர்ச்சியில் பொது மக்கள்

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த வாரம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது வரை மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர்.

ஒரு பக்கம் முடக்கம் மற்றொரு பக்கம் கோடை வெயிலின் தாக்கம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு மின்சார பயன்பாடு அதிகரித்தது. ஊரடங்கால் அரசு அலுவலகங்கள் இயங்காத நிலையில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது மின்சார உபயோகம் அளவிடப்பட்டு கட்டண விவரத்தைப் பார்த்த மக்களுக்கு ஷாக் ஏற்பட்டுள்ளது. மின்சார பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்ததால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது. மாறாக கடந்த சில மாதங்களுக்கு முன் பயன்படுத்திய அதே அளவிலான மின்சார உபயோகத்திற்கு தற்போது 4 முதல் 5 மடங்கு கட்டணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகா்வோா் 560 ரூபாயை கட்டணமாக செலுத்திய நிலையில், தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1,240 யூனிட் என தீர்மானித்து 4,584 ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கோவையைச் சோ்ந்த மின் பயனீட்டாளருக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தாவது ஒரு யூனிட்டுக்கு 1.80 ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு யூனிட்டுக்கு 3.60 ரூபாயாக கட்டணமாக செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பொது முடக்கத்தால் பொதுமக்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், அரசே மக்களை வஞ்சிப்பதா என்ற குரல் எழுந்துள்ளது. மின்சார வாரியத்தின் இந்த கட்டண கொள்ளைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.