தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!!
தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே பொட்டலூரணி பகுதியில் என்பிஎம் மீன் உணவுகள் மற்றும் எண்ணெய் பொருட்கள் என்ற கழிவு மீன் நிறுவனமும், வடக்குக் காரசேரி கிராமத்தில் உள்ள மார்க்ஸ்மேன் அகுவாடிக் தயாரிப்புகள் என்ற கழிவு மீன் நிறுவனமும் இயங்கி வருகின்றன.
இவை மனிதப் பயன்பாட்டிற்குத் தகுதியற்றது என்று ஒதுக்கப்பட்ட அழுகிய கழிவு மீன்களை மூலப் பொருளாகக் கொண்டுவந்து மீன் உணவு, மீன் எண்ணெய் தயாரித்து வருகின்றனராம். மேலும் அப்பகுதியில் உள்ள மானவாரி, விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர்களை லாரிகள் மூலமும், நேரடியாகவும் திறந்து விடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில், சில வாயுக்களை வெளியேற்றி வருகின்றனர்.
இதன் துர்நாற்றம் காற்றில் கலந்து அருகிலுள்ள மக்கள் வீடுகளில் இருக்கமுடியவில்லை. பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றன. விவசாய நிலங்களில் நின்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.