ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் அக். 5ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே இந்த புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என பலரும் அரசின் அனுமதியின்றி இந்த ரயில்களில் பயணம் செய்வதால் சமூக இடைவெளி இல்லாமல் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது என்பது போன்ற புகார்கள் வந்தது. தடுக்கும் வகையில் புறநகர் மின்சார ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பயனாளிகளின் அடையாள அட்டையை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பொதுமக்கள் பயணம் செய்வதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

இதையடுத்து தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர் களுக்கு மட்டுமே இயக்கப்படும் இந்த புறநகர் மின்சார சிறப்பு ரயிலில் அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு மீறி பயணம் செய்பவர்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அறிவிப்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.