திருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

Photo of author

By Sakthi

சூரியன் கன்னி ராசியில் பிரவேசம் செய்யும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்த புரட்டாசி மாத நாட்களில் நாள்தோறும் பெருமாளை வழிபட்டு வந்தால் மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமண பிராப்தம் பெறுவார்கள் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் நீராடி விட்டு பூஜை அறையை தூய்மையாக மெழுகிக்கோலமிட்டு, பூ வைத்து பெருமாளின் திருவுருவ படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வைக்க வேண்டும்.

அதன் பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து மாவு எடுத்து, அத்துடன் வெல்லம் கலந்து பிடித்து வைக்க வேண்டும்.

இதில் திரி, நெய் விட்டு விளக்கேற்றி மலர், துளசி அட்சதை கொண்டு பெருமாளை அர்ச்சனை செய்து அவரின் திருநாமங்களை மனதார சொல்லி வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இடத்தில் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.

வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருப்பதியில் இப்படி ஒரு வழிபாட்டினை பல பெண்கள் கோவிலின் பல இடங்களில் செய்வதை காணலாம். திருமண வரம் பெற இது அற்புதமான வழிபாடு என்று பெரியவர்கள் தெரிவிப்பார்கள்.

புரட்டாசி மாதத்தில் காலை நேரத்தில் வீடுகளில் திருவிளக்கு மாவு கொண்டு, பெருமாளை வழிபட்டு விட்டு மாலையில் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்தால் மிகவும் சிறப்பு என்று சொல்கிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நரசிம்மர் திருவீதிவுலா நடைபெறுவது விசேஷம்.

அதே சமயத்தில் மாவிளக்கு பூஜை செய்வது மிகவும் சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்லாமல் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளம் கலந்த அரிசி மாவில் நெய் விளக்கிட்டு, நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கள காரியங்களும் சித்திக்கும். வளங்கள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.