அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி விஜயபாஸ்கர் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் துறை சார்ந்த நடவடிக்கையிலும் சரி, பொது துறையிலும் சரி அவருடைய செயல்பாடு நன்றாக இருந்ததால் பொதுமக்களிடையே அவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அதோடு பொதுமக்கள் அனைவரும் இவரை தனி மரியாதையுடன் பார்க்க தொடங்கினார்கள். இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது அதாவது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் விஜயபாஸ்கர் தான் என்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் உருவானது. இதனை தெரிந்துகொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விஜயபாஸ்கர் துறைசார்ந்த நடவடிக்கைகளில் இருந்து சற்றே ஒதுக்கி வைத்து செயல்பட்டார்.
அதாவது நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பான விவரங்களை வெளியிடுவது போன்ற பல முக்கிய விஷயங்களில் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் முன் நின்று செயல்பட்டு வந்தார். விஜயபாஸ்கரின் இந்த திடீர் வளர்ச்சியின் காரணமாக அவர் தமிழக அரசியலில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்படும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் ஆனாலும் நாட்கள் செல்லச்செல்ல நிலைமை சரியானது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகள் மற்றும் அவருடைய உதவியாளர்கள் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்றைய தினம் காலை முதல் இரவு வரை இலஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனை தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் ஒரு சில விஷயங்களை தெரிவித்து உள்ளது.
அதாவது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பொது ஊழியராக பணி செய்து வந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் தன்னுடைய பெயரிலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் பங்குதாரர்களாக இருக்கின்ற நிறுவனங்கள் பெயரிலும், வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் அளவில் சொத்து சேர்த்து இருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டம் 2018 இன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி விஜயபாஸ்கர், அவருடைய மனைவி ரம்யா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதோடு தொழில் பங்குதாரர்கள் உடைய இல்லங்களில் சோதனை நடைபெற்றது. அதோடு அவர்களுடைய அலுவலகங்களிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும் அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் என்று ஒட்டுமொத்தமாக ஐம்பது பகுதிகளில் சோதனை நடை பெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த சோதனையில் இருபத்தி மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 4.87 கிலோ தங்கமும் நூத்தி முப்பத்தி ஆறு கனரக வாகனங்கள் பதிவு சான்றிதழ் மற்றும் சொத்து பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள், 19 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து விசாரணை நடந்து வருகிறது என லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நடந்தது. நான் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் அவர்களும் முறையாக நடந்து கொண்டார்கள். இருந்தாலும் என்னுடைய பொதுவாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் ஒரு சில செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிமுக இதனை எதிர்கொள்ளும் என்னுடைய வீட்டிலிருந்து எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை, இது தொடர்பாக நான் மிக விரிவாக பிறகு பத்திரிக்கைகளை சந்தித்து விவரங்களை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.