இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு
பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ரயிலில் செல்வதை பாதுகாப்பான பயணமாக கருதி வருகின்றனர்.ஆனால் பல்வேறு சமயங்களில் பாதுகாப்பான பயணமாக கருதப்படும் ரயில் பயணத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான விபத்துகள் ரயில்வேயின் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டாலும்,சில சம்பவங்களில் பயணிகளின் செயல்களினாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை குறிப்பிடலாம். இதனையடுத்து ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்து எலெக்ட்ரிக் பாயிண்டுகள் அனைத்தையும் ஆப் செய்து வைக்கப்பட வேண்டும் என்று ரெயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரை செய்திருந்தார். மின்கசிவு காரணமாக ரயிலில் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் அவர் இவ்வாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ரயில் விபத்துக்கள் குறைய பாதுகாப்பு கமிஷனரின் அப்போதைய பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதனைதொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி முதல் அவரின் பரிந்துரையை மேற்கு ரெயில்வே நிர்வாகம் நடைமுறைக்கு கொண்டுவந்து விட்டது. அதாவது அந்த பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள்.
இது குறித்து மேற்கு ரெயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வேயும் தற்போது அறிவித்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரங்களில், அதாவது இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எதையும் சார்ஜ் செய்ய முடியாது.இதன்மூலமாக ரயில்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரெயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரெயில்வே நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.