ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

Photo of author

By Parthipan K

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

தமிழ் திரையுலகில் நடிகராக ரஜினி அடியெடுத்து வைத்த போது, கமல் மக்களுக்குத் தெரிந்த நடிகராகத் தன்னை நிலை நிறுத்தியிருந்தார்.

ரஜினி வில்லனாக நடிக்கத் துவங்கும் போது கமல் தன்னை கதாநாயகனாக உயர்ந்திருந்தார். கமல் ரஜினி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நடித்து வந்தனர். இந்நிலையில் தான் கமலின் ஆலோசனையின் பெயரில் இருவரும் இனைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர்.

‘பைரவி’ படத்தின் மூலம் முதன் முதலாக அடியெடுத்து வைத்த ரஜினிக்கு அதன் பின் ஏறுமுகம் தான். மற்றொரு பக்கம் கமலும் நல்ல வளர்ச்சியடைய, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜியின் இடத்தை ரஜினி – கமல் எட்டி பிடித்தனர்.

இருவருக்கும் சரி சமமாக ரசிகர் வட்டம் பெருகியது. ஒரே நாளில் இருவரின் படமும் வெளியாகிறதென்றால், திரையரங்கிற்கு காவல்துறையின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ரசிகர்களிடத்தில் அந்த இணக்கம் இல்லாமல் போனது. இதனால் ஒரு காலகட்டத்தில் இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதுவதைத் தவிர்த்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சந்திரமுகி’ – ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் வெளியானது.

தற்போது இருவரும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள நிலையில், கமல் ‘இந்தியன் 2’ திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.

அதே போல் தற்போது ‘அண்ணாத்த’ படத்தினில் நடித்து வரும் ரஜினி அடுத்து ஒரே ஒரு படம் நடித்து விட்டு, அத்துடன் திரைத்துறையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த படத்தைக் கமலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடித்துத் தரவுள்ளார்.

அந்த படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜை இயக்குநராக ஒப்பந்த செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் கமலுக்கு யோசனை ஒன்று உதித்துள்ளது. உடனடியாக ரஜினியைச் சந்தித்தவர், நம் இருவரின் கடைசி திரைப்படத்தை ஏன் ஒரே நாளில் வெளியிடக்கூடாது? என தன் யோசனையை ரஜினியிடம் கூறியுள்ளார்.

அவரும் அதைக் கேட்டு உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனையடுத்து பொங்கல் 2021ல் இருவரின் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதை நோக்கி இருவரும் திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கும் போது தான் எதிர்பாராத விதமாக கொரோனா பரவல் ஏற்பட்டு இருவரின் படங்களும் முடங்கியுள்ளது.

‘இந்தியன் 2’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி இன்னும் 50 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதால் அது முடித்துக் கொடுத்த பின்னர் தான் அவர் புதிய படத்தில் நடிக்க முடியும் என்ற நிலையுள்ளது.

கமலின் இந்த திட்டம் தற்போதைக்கு தள்ளிப் போயுள்ள நிலையில், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் சாத்தியப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.