இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினிக்கு, 30 நாள் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு, ஒரு மாத காலம் பரோல் அளிக்க வேண்டும் என அவருடைய தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவருடைய தாயார் பத்மா உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்குமாறு, கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் பரோல் வழங்க வேண்டி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதன் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதனடிப்படையில் கடந்த டிசம்பர் 23 இல் அவருக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 27ல் நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், மேலும் 30 நாட்கள் பரோலில் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். இதை ஏற்று தமிழக அரசு நளினிக்கு 30 நாள் மேலும் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.