தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்கள்.
தற்போது பதவியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா (திமுக) மற்றும் வைகோ (மதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 முதல் தொடங்கி முடிவுகள் ஜூன் 19 அன்று அறிவிக்கப்படும்.
கவிஞர் சல்மா – ஒரு பார்வை:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிஞர் சல்மா. இவரது இயற்பெயர் ரொக்கையா மாலிக். சிறுவயதில் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் விட்டுவிட்டு திருமணமான இவர், எழுத்து வழியாக தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். இவரது கணவர் திமுக பின்புலத்தை கொண்டவர் என்பதால், சல்மாவும் அரசியல் சாசனத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
இலக்கியத்திலும் அரசியலிலும்:
சல்மாவின் கவிதைகள், குறிப்பாக “இரண்டாம் ஜாமங்களின் கதை”, “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்”, மற்றும் “பச்சை தேவதை” போன்ற நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2018-ல், திமுக சார்பில் தந்தை பெரியார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அதற்குபின், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக பணியாற்றிய சல்மா, 2006 சட்டமன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை.
தற்போது:
பின்னர், தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவியாக நியமிக்கப்பட்ட இவர், தொடர்ந்து திமுக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளராகவும் செயல்பட்டார். தற்போது, திமுக செய்தி தொடர்பு பிரிவில் இணைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், அவர் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு என்பதாலும் மிக முக்கியமானதாகும்.