நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று(ஜனவரி22) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தி நகரமே விழா காலம் பூண்டுள்ளது. மேலும் திரும்பும் இடமெல்லாம் ராமஜெயம் என்ற பாடல் கேட்கவும் முடிகின்றது.
ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கியது.
கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ராமர் கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறகட்டளையின் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அளித்த நன்கொடையின் மூலமாக கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று(ஜனவரி22) மதியம் 12.20 மணிக்கு நடக்கின்றது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. ராமர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சாரியார்கள் இணைந்து இந்த சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலைக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் சிலையின் கண்களில் மஞ்சள் துணி கட்டப்பட்டுள்ளது. கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் பொழுது ராமர் சிலையில் கண்களில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணி அகற்றப்படும்.
இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(ஜனவரி22) மதியம் 12.20 மணிக்கு நடைபெறுகின்றது. பல வகையான பூஜைகள் முடிந்த பின்னர் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறுகின்றது.
இந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் ஆலயத்தில் நகரத்தின் எல்லையில் தங்கியுள்ளனர். மேலும் ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் காரணமாக அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் காட்சியளிக்கின்றது.
ஆலயத்தில் ராமர் கும்பாபிஷேகம் காரணமாக ஒரு வாரத்திற்கு முன்னரே அயோத்தி நகரம் விழா கோலம் பூண்டது. கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7500 அலங்கார செடிகளும் ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ராமர் கோயில் ஜொலிப்பதற்காக வண்ண வண்ண மின்விளக்கு சரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல அயோத்தியில் உள்ள முக்கிய கோவில்களிலும் அயோத்தி அரச மாளிகையான ராஜ் சதன் மாளிகையும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் தீபாவளி போல கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக இன்றைய தினம் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராம ஜெயம் கூறி வழிபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து இன்று(ஜனவரி22) இரவு அயோத்தியில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றப்படவுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீடுகளில் ராமஜோதி ஏற்றி வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.