இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு
வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைகண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் முழு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தின் மாபெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தின் தலைவர் திரு.ராமசாமி படையாச்சியின் மணிமண்டபத்தை நான் திறந்து வைத்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனவும், ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்தார். வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கேட்காமலேயே இராமசாமி படையாச்சியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க நான் நடவடிக்கைகள் எடுத்தேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் நீண்டநாள் கோரிக்கை ஒன்றை வைத்துக்கொண்டிருந்தனர், அது தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், என்ன கோரிக்கையை என்பதை வெளியிட மறுத்துவிட்டார். வன்னியர் சமுதாயத்திற்காக இந்த அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.