ராணிப்பேட்டை மாவட்டம் நாராயணபுரம் அருகே மலைசுற்றுவட்டார பகுதியில் உள்ள பலர் கடந்த பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற எஸ்.பி.மயில்வாகனன் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை உடனடியாக கைது செய்தார்.
இதையடுத்து அவர்களின் வாழ்வாதார வருமானத்திற்கு வேறு வழியில்லை என்பதை அறிந்து, திரைப்பட கதாநாயகன் போலவே அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளார். இனி நாங்கள் கள்ளச்சாராயம் காய்ச்சமாட்டோம் என்று நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 50 பேர் உறுதியளித்துள்ளனர்.
அவர்களின் அடிப்படை பொருளாதார சிக்கலை தீர்க்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கலந்துபேசி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 2019 – 2020 ஆண்டுக்கான மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் திருந்தியவர்களுக்கு கறவை மாடுகளை வாங்கி கொடுத்தார்.
ஒட்டுமொத்தமாக 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.44 லட்சம் மதிப்புள்ள கறவை பசு மாடுகள் மற்றும் அதற்கான கொட்டகை அமைப்பதற்கான நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மூலம் வழங்கினார். இந்த சம்பவத்தினால் எஸ்.பி.மயில்வாகனன் மீது அப்பகுதி மக்கள் அன்பையும், மரியாதையும் வைத்ததோடு மனம் நெகிழ்ந்து போயுள்ளனர்.
இதற்குமுன்பு ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலம் என்ற கிராமத்தில் கள் விற்பனை செய்தவர்களை திருந்தி நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை ஏற்படுத்தி அதற்கான கருவிகளையும் வாங்கி கொடுத்துள்ளார். இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் மக்களிடம் நல்லமுறையில் அணுகும் எஸ்.பி.மயில்வாகனனை மலைக்கிராம மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். காவல்துறை உங்களின் நண்பன் என்பதற்கு ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் எஸ்.பி.மயில்வாகனன் ஒரு நேரடி சாட்சி.