துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.
துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ கடத்தி வந்தால் இவருக்கு 5 லட்சத்தை ஒரு கும்பல் கொடுத்திருக்கிறது.
இதுவரை 45 நாடுகளுக்கும் சென்று அவர் தங்கம் கடத்தி வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அதில் கடந்த வருடம் மட்டும் துபாய்க்கு 18 முறை போய் வந்திருக்கிறார். விக்ரம் பிரபு நடித்து 2016ம் வருடம் வெளியான வாகா படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும், 2 கன்னட படங்களிலும் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் தங்க கடத்தல் வேலையை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
அவரை ஒரு கும்பம் மூளைச்சலவை செய்து பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எப்போது எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும்?. எங்கு தங்க வேண்டும்?.. தங்கத்தை எப்படி மறைத்து கொண்டு வர வேண்டும்? என எல்லாவற்றையும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் வசம் சென்றுவிட்டது. இந்நிலையில், தங்கம் கடத்தும் சர்வதேச கும்பலுடன் ரன்யா ராவுக்கு தொடர்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.