திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல்

Photo of author

By Sakthi

திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல்

தமிழ்நாட்டில் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவர் இடத்தில் ஆண்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் phh மற்றும் phh aay என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு வகையான குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தர இயலும் என்று சமூகவலைதளங்களில் வதந்திகள் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை நம்பிக்கொண்டு பொதுமக்கள் அனைவரும் வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத் தலைவரின் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டைகளின் வகைகளை மாற்றவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால் வருமான சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் போன்ற மற்ற ஆவணங்களை பெற முயற்சி செய்யும் போது சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பயம் கொண்டு இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கும்போது, குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது தொடர்பாக அரசிடமிருந்து இதுவரையில் எந்த விதமான முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக தமிழக அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தமிழகத்தில் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்னர் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்துமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வரும்,அமைச்சர்களும் எந்த ஒரு உறுதியான பதிலும் அளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்ப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே போல திமுகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.