ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இனிவரும் மாதங்களில் இலவசமாக கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வைரஸின் தாக்கம் மற்றும் மக்களின் இயல்புநிலை பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வபோது சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.
மக்களின் பொருளாதாரத்தை எண்ணி தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உதவித்தொகை ரூ.1000, மற்றும் விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டதன் காரணமாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாகவே சர்க்கரை, அரிசி ,பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.
அரிசி மட்டும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டதை விட கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 4 மாதங்களாக நியாய விலை கடையில் இலவசமாக கொடுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் முதல் இலவசமாக கிடையாது, பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் 1, 3, 4 ஆகிய தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும்.
இந்த தேதிகளில் ஊழியர்களே அனைத்து வீட்டிற்கும் சென்று டோக்கன் தர வேண்டும்.
மேலும், நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைதாரர்களுக்கு குறையாமல் பொருட்களை வழங்க நியாய விலை கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படும் என ஊழியர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், நியாய விலை கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.