நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!!

0
129

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் தலைவர் கு.பாலசுப்பிரமணியன்,

நியாய விலைக் கடை பணியாளா்களின் போராட்டம் குறித்து அரசு அதிகாரிகளிடம் 5 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் 8 முறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் நியாய விலைக் கடை பணியாளா்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இருவரின் குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முருகவேல் என்ற பணியாளா் கொரோனா தொற்றால் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், கொரோனா காலத்திலும் நியாய விலைக் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்களை வழங்குவதில்லை.

நியாய விலைக் கடை பணியாளா்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்றால் பாதிக்கப்படுவோரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். மேலும், நியாய விலைக் கடை பணியாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். சில (குறிப்பாக புதுக்கோட்டை, திருவள்ளூா், சேலம்) மாவட்டங்களில் நியாய விலைக் கடை பெண் பணியாளா்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் பணியாளர்களை பாதுகாக்க வேண்டிய அரசு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகளை பாதுகாத்து வருகிறது.

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடும் நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடை பணியாளா்களும் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், அனைத்து இணைப் பதிவாளா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

பேட்டியின் போது, சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவா் துரை சேகா், மாவட்ட துணைத் தலைவா் கே.நடராஜன், ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Previous articleதல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!
Next articleரவுடி சாரின் போட்டோஷூட்! நடிகர் நடிகைகள் மட்டும் தான் போட்டோ ஷூட் பண்ணுவாங்களா என்ன? நாங்களும் பண்ணுவோம்!