“வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களா? அப்ப இத செய்ங்க…” ரவி சாஸ்திரி சொல்லும் அறிவுரை!
ஐபிஎல் தொடர் உலகளவில் அதிக பணம் கொழிக்கும் ஒரு லீக் போட்டியாக உருவாகியுள்ளது.
இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை.
இந்நிலையில் நாளுக்கு நாள் வருவாயை அதிகரித்துக் கொடுக்கும் ஐபிஎல் தொடரை வருடத்துக்கு இரண்டு தொடர்களாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “இரண்டு தொடர்கள் நடத்த வேண்டும் என்றால் அதை உலகக்கோப்பை தொடர்போல நாக் அவுட் சுற்றுகளாக நடத்தவேண்டும். இப்போது 10 அணிகளாக இருப்பது இன்னும் சில ஆண்டுகளில் 12 அணிகளாகலாம்.” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் போட்டியால் ஐசிசி தொடர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.