மாநிலங்களுக்கு நிர்பந்தம் – குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு

Photo of author

By Parthipan K

குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரிகளும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட முதல் மந்திரிகளும் அறிவித்துள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற ரீதியில் மாநிலங்களை மத்திய அரசு  நிர்பந்திக்க துவங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது “குடியுரிமை உள்ளிட்ட மத்திய பட்டியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை ஆகும். நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டமும், பிராந்தியத்துக்கு புறம்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் செல்லுபடியாகாது என்று கூறக்கூடாது. இதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 245 உட்பிரிவு 2 சொல்கிறது.குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சூளுரைப்பவர்கள் தகுந்த சட்ட ஆலோசனையை பெற வேண்டும். அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு அதிகாரத்துக்கு வருகிறவர்கள், அரசியல் சாசனத்துக்கு விரோதமான கருத்துகளை கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது “என்று கூறியுள்ளார்.