முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
நடப்பு பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றது.
நேற்று(17.03.2024) டெல்லியில் நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியும் மெக் லென்னிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லென்னிங் அவர்களும் வீராங்கனை ஷபாலி வர்மா அவர்களும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் 64 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடிக் கொண்டிருந்த டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. மெக் லென்னிங் 23 ரன்களுக்கும் ஷபாலி வர்மா 44 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் அலிஸ் கேப்சி இருவரும் வீராங்கனை மொலினியக்ஸ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் ஆர்சிபி அணியின் வீராங்கனைகள் வீசிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி பெண்கள் அணியில் சிறப்பாக பந்துவீசி ஸ்ரெயங்கா படில் 4 விக்கெட்டுகளையும், ஷோபி மொலினியக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஆஷா ஷோபனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து ஆர்சிபி பெண்கள் அணிக்கு 114 ரன்கள் இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கை நோக்கி ஆர்சிபி பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோபி டிவைன் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சிறப்பாக விளையாடி 49 ரன்கள் சேர்த்தனர். 32 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஷோபி டிவைன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் ரிச்சா கோஷ் மற்றும் எலைஸ் பெர்ரி இருவரும் பொறுமையாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். தொடர்ந்து இருவரும் பொறுமையாக விளையாட ஆர்சிபி பெண்கள் அணி 19.3 ஓவரில் 115 ரன்கள் எடுத்து இரண்டாவது சீசனில் தன்னுடைய முதல் பெண்கள் பீரிமயர் லீக் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆர்சிபி அணி வென்றது.
இதையடுத்து ஆட்டநாயகி விருதை ஷோபி மொலினியக்ஸ் வென்றார். மேலும் அதிக ரன்கள் எடுத்த ஆரஞ்ச் தொப்பி விருது வீராங்கனை எலையஸ் பெர்ரிக்கு வழங்கப்பட்டது. மேலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு ஊதா தொப்பி விருது ஸ்ரெயங்கா பட்டில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் விருது டீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து பெண்கள் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி அணி ரசிகர்கள் பெண்கள் ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆண்கள் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அவர்கள் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அவர்களுக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தது இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஆண்கள் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாமல் பெண்கள் ஆர்சிபி அணியாவது கோப்பையை வென்றது என்று ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.