அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!
திரை உலகில் பெரும்பாலானவர்கள் இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். அதாவது, தந்தை இயக்குனராக இருந்தால் மனைவி தயாரிப்பாளராகவும் மகன் நடிகராகவும் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நிஜ வாழ்க்கையில் அப்பா – மகன்களாக இருக்கும் நடிகர்கள் சினிமாவிலும் அப்பா – மகன்களாக நடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.
சிவாஜி- பிரபு

நடிகர் சிவாஜி கணேசனும் பிரபுவும் இணைந்து கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான நீதிபதி எனும் திரைப்படத்தில் அப்பா – மகனாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இதில் சிவாஜி, பிரபுவுடன் இணைந்து கே ஆர் விஜயா, சுஜாதா, ராதிகா, மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பின்பு அதே வருடம் ஜூன் மாதத்தில் வெளியான சந்திப்பு எனும் திரைப்படத்திலும் சிவாஜி மற்றும் பிரபு அப்பா – மகனாக நடித்திருந்தனர். இந்த படத்தை சி வி. ராஜேந்திரன் இயக்க சுஜாதா மற்றும் ஸ்ரீதேவி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து அதை ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்திலும் அப்பா – மகனாக சிவாஜி மற்றும் பிரபு நடித்திருந்தனர். இவர்களுடன் கேஆர் விஜயா மற்றும் சுலக்சனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்கியராஜ் – சாந்தனு
கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் பாக்கியராஜ் மற்றும் சாந்தனு இருவரும் அப்பா – மகனாக நடித்திருந்தனர். இதில் பாக்கியராஜிற்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இதனை பூர்ணிமா பாக்யராஜ் தயாரிக்க நடிகர் பாக்கியராஜ் எழுதி இயக்கியிருந்தார்.
சிவக்குமார் – சூர்யா

கடந்த 2000 ஆம் ஆண்டு கே ஆர் ஜெயா இயக்கத்தில் வெளியான உயிரிலே கலந்தது எனும் திரைப்படத்தில் சிவகுமாரும் சூர்யாவும் அப்பா – மகனாக நடித்திருந்தனர். இதில் சிவகுமாருக்கு ஜோடியாக ராதிகாவும் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகாவும் நடித்திருந்தனர்.
சத்யராஜ் – சிபிராஜ்
கடந்த 2005 ஆம் ஆண்டு சத்யராஜும் சிபிராஜும் இணைந்து வெற்றிவேல் சக்திவேல் எனும் படத்தில் அப்பா – மகனாக நடித்திருந்தனர். இதில் குஷ்பூ மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
கார்த்திக் – கௌதம் கார்த்திக்

கடந்த 2018ல் திரு என்பவர் இயக்கிய திரைப்படம் தான் மிஸ்டர் சந்திர மௌலி. இந்த படத்தில் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து அப்பா- மகனாக நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.