திமுக தலைவரின் விளம்பர அரசியலுக்கு பலியான ஜெ அன்பழகன்

Photo of author

By Ammasi Manickam

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கடந்த 10 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். மேலும் அவர் தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 62 வயதாகும் அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்தது முதல் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச குறைபாடு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் சமூக விலகல் மட்டுமே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பல்வேறு நாடுகளும் கடைபிடித்து வரும் சூழலில் மத்திய அரசும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வழக்கமான அரசியலை இந்த கொரோனா பாதிப்பு நேரத்திலும் கையிலெடுத்தார். நாட்டு மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் திமுக தலைமை மட்டும் “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய முயற்சித்தது.

அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல் இவர் மக்களை சந்திக்க திட்டமிட்டதை ஆரம்பத்திலேயே பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக இதை செய்வதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.இதனையடுத்து மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து கொடுக்கும் போது தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொண்டனர்.

சமீபத்தில் விளம்பர அரசியலை முன்னிறுத்தி திமுக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் தொடர்ந்து சறுக்கல்களை மட்டுமே சந்தித்து வருகிறது. குறிப்பாக ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சி அந்த கட்சிக்கே எதிராக முடியும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. அதே நிலை தான் தற்போது “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்திலும் நடந்துள்ளது.

ஏற்கனவே திமுகவை சேர்ந்த எம்பிக்கள் தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்திக்கும் போது தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி தயாநிதிமாறன் சர்ச்சையில் சிக்கியது போல தற்போது ஜெ அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவும் திமுக தலைவரின் ஆரம்பித்த இந்த “ஒன்றினைவோம் வா” என்ற திட்டம் தான் காரணம் என சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவரின் விளம்பர அரசியலுக்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை பலி கொடுத்ததாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.