பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

Photo of author

By Parthipan K

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (பிப்ரவரி 17-ந் தேதி) மாலையுடன் நிறைவடைந்தது.

தேர்தலை அமைதியான முறையில் எந்தவித பிரச்சனையும் இன்றி நடத்தி முடிப்பதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பிறகு அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 31,150 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தவகை வாக்குசாவடிகளில் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் சிக்கலை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் வெளியாட்களின் தேவையற்ற நடமாட்டங்களைத் தடுக்க மாநிலம் முழுவதும் சுமார் 455 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பணியில் மொத்தமாக 97,882 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.