நீர் திறப்பால் மகிழ்ச்சி! கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

Photo of author

By Parthipan K

காவேரி அணையில் நீர் திறக்கப்படவுள்ளதால் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். 

கரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை பிரதானமாக சாகுபடி செய்யப்படக் கூடியவை. இதற்கு அடுத்த நிலையில்,கோரை,  வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுவது வழக்கம்.

சமீப வருடங்களாக மரவள்ளிக்கிழங்கு மூலம் அதிக லாபம் ஈட்டபடுவதை உணர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் இறங்கி விட்டனர். அதன்படி, சென்ற இரண்டு மாதங்களில் 120 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்ட விவசாயிகள் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் 600 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மரவள்ளிக்கிழங்கு இலங்கை பயிரிட்ட விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். அதற்கான காரணம், மரவள்ளிக்கிழங்கை ஒருமுறை பயிரிட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த பயிரையும் மண்ணில் விதைக்க முடியாது. கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக பராமரிப்பு செலவு மற்றும் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும்.

ஆனால் மரவள்ளி கிழங்கிற்கு பராமரிப்பு செலவும் கிடையாது. தண்ணீர் தேவையும் குறைவு தான். எனவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கொடுக்கக்கூடியதாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஜவ்வரிசி ஆலைகளிலிருந்து விவசாய நிலத்திற்கு வந்து மரவள்ளி கிழங்குகளை ரூ12 ஆயிரம் மதிப்பில் வாங்கி செல்வார்கள்.

பின் ஊரடங்கனால் ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு இருந்ததனால் மட்டுமே மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றிற்கு ரூ8,300 என்ற அடிப்படையில் விற்கப்பட்டு வந்தன. தற்போது மீண்டும் ஆலைகள் திறக்கப்பட உள்ளதால், விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மரவள்ளிகிழங்கு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.