மலிவான விலையில் பிபிஇ உடைகளை தயாரிக்கும் ரிலையன்ஸ்

Photo of author

By Parthipan K

கொரோனா நோயாளிகளை எதிர்கொள்வதற்கும், சிகிச்சையளிப்பதற்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுடன் அன்றாடம் தொடர்பிலிருப்பவர்கள் பிபிஇ கிட் எனப்படும் கவச உடை அணிவது அவசியம். அப்படி அணிந்தால் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

அமெரிக்கா, லண்டன் உட்பட மேல் நாடுகளிலேயே மருத்துவர்களுக்கு சரி வர பிபிஇ உடைகள் அளிக்கப்படாத காரணத்தால் அங்கு மருத்துவ துறையை சேர்ந்த பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.

இந்தியாவிலும் பிபிஇ உடைகள் பற்றாக்குறையால் அன்றாடம் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா சீனாவிலிருந்து வாங்கிய பிபிஇ உடைகளின் தரம் நன்றாக இல்லாத காரணத்தினால் அவை திருப்பி அனுப்பப்பட்டன.

இதனையடுத்து இந்தியாவிலேயே பல நிறுவனங்கள் பிபிஇ உடைகளை தயாரித்து வருகின்றன. இதில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் இனைந்துள்ளது. ரிலையன்ஸ் சமீபத்தில் குஜராத் மாநிலம் சில்வாசாவில் உள்ள தனது ஆடை உற்பத்தியகமான ஆலோக் நிறுவனத்தை வாங்கியிருந்தது.

தற்போது இந்த நிறுவனத்தை பிபிஇ உடைகளைச தயாரிப்பதற்கான நிறுவனமாக மாற்றி வடிவமைத்துள்ளது.

சீனாவில் 2000 ரூபாய்க்கு பிபிஇ கிட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அசல் தரத்தில் பிபிஇ உடைகளை 650 ரூபாய்க்கு தயரித்து வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவிற்கான தேவை போக, பிபிஇ உடைகளை இங்கிருந்து ஏற்றுமதி செய்யக்கூடும் என்னும் தகவலையும் ரிலையன்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.