நம்பிக்கை வாக்கெடுப்பு! முக்கிய முடிவை எடுத்த நாராயணசாமி!

Photo of author

By Sakthi

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்த நிலையில், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் தனவேல் சென்றவருடம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய இரண்டு பேரும் தங்களுடைய சட்டசபை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இதன் காரணமாக, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு குறைந்து காணப்பட்டது. இப்பொழுது 28 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கும் புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை நிரூபிப்பதற்கு 15 சட்டசபை உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 7 சட்டசபை உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 4 சட்டசபை உறுப்பினர்களும் ,பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று சட்டசபை உறுப்பினர்களும், என்று 14 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதாக ஆளுநரிடம் எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் 14 பேரும் கையெழுத்து போட்டு மனு கொடுத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அதாவது இன்றைய தினம் சட்டசபையை கூட்டி காங்கிரஸ் கட்சியை தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இந்த நிலையில் ராஜ்பவன் தொகுதி சட்டசபை உறுப்பினரான லட்சுமிநாராயணன் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேரில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நேற்றையதினம் வழங்கியிருக்கிறார். இதன் காரணமாக, முதல்வர் நாராயணசாமி கடுமையான நெருக்கடி எழுந்திருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் திமுகவைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் வெங்கடேசன் தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் நேரில் அளித்திருக்கிறார். திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்ததன் காரணமாக, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்து போனது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் போன்றோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை செய்தோம், இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை சட்டசபை கூடுவதற்கு முன்பு இறுதி முடிவு எடுக்கப்படும் என்ன நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம் என்பதை சட்டசபையில் தெரிவிப்போம் என்று நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.