கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான துணிக்கடைகள் நகை கடைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு வார காலத்திற்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மிகக்கடுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களை ஒரு வாரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும் என்று திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 நபருக்கு மேல் செல்லாமல் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று கூறியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர்.
மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன கண்காணிப்பு குழுக்கள் மூலமாக விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய்த்தடுப்பு பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சமீரன்.