ஆசியக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்… ரிக்கி பாண்டிங் கருத்து
ஆசியக்கோப்பை தொடரை இந்தியாதான் வெல்லும் என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்றால் மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோத வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்த தொடரை இந்திய அணிதான் வெல்லும்” எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் “ ஒரு ரசிகனாக இந்த போட்டியைக் காண நானும் ஆவலாக உள்ளேன். இந்த போட்டியில் இந்திய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம். நான் இப்படி சொல்வதால் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆசியக்கோப்பைக்கு மட்டும் இல்லாமல் அடுத்து வரும் டி 20 உலகக்கோப்பைக்கும் இந்திய அணி தயாராக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.