அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன.
இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்களை பெற்று தனது பரவும் திறனை மாற்றியமைத்து கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் என பலக்கட்ட உருமாற்றங்களை இந்த கொரோனா வைரஸ் அடைந்துள்ளது.
கொரோனா வைரஸின் இந்த உருமாற்றங்கள் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் உருவாக காரணமாக அமைந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா தொற்றின் பரவலால் இந்தியாவில் இதுவரை கொரோனாவின் மூன்று கட்ட அலைகள் உருவாகி உள்ளன.
இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சீனாவில் தற்போது கொரோனாவின் நான்காவது அலை பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து கொண்டே வருவதால் அந்த நகரத்தில் ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து ஷாங்காய் நகரில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷாங்காயில் உள்ள டிஸ்னி தீம் பார்க் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் சிறு வர்த்தகங்கள், தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பாதிப்பை சரி செய்வது குறித்து சீன பொருளாதார நிபுணர்களும், அரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

