தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் – மத்திய அரசு அதிரடி
தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றது. அதற்கு மாற்றாக, மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2022 என்ற மசோதாவை தற்போது உருவாக்கியுள்ளது. இந்த வரைவு மசோதாவின் உட்பிரிவுகளில், தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாப்பதற்கான அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தரவுகள், சட்டரீதியான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அதற்காக ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவில், அபராத தொகை ரூ.15 கோடியாக இருந்தது. அத்தொகையானது தற்போது ரூ.500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.