தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
இதற்கிடையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஸ்டாலினை சட்டமன்ற குழுத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
இதனை அடுத்து இன்று காலை தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து உரிமை கேட்டார் ஸ்டாலின். ஆதரவு சட்டசபை உறுப்பினர்களின் கடிதம், அமைச்சரவை பட்டியல் மற்றும் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானம் போன்றவற்றை ஆளுநரிடம் வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த சூழ்நிலையில், திமுகவைச் சார்ந்த ஆர் எஸ் பாரதி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது திமுக சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை அலுவலரிடம் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.