தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் உக்ரைன் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்த ரஷ்யா நேற்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.
இந்தப் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் சர்வதேச சந்தைகளில் பல்வேறு வீழ்ச்சிகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், அதன் எதிரொலியாக, அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 99 காசுகள் வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
அத்துடன் இந்த போர் விவரம் காரணமாக, உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நோய்த்தொற்று உள்ளிட்டவற்றில் சிக்கி உலக பொருளாதாரம் கடுமையான மந்த நிலையில்தானிருக்கிறது.
தற்போது உலகில் வல்லரசு நாடாக திகழ்ந்து வரும் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைனில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்ற இந்த சூழ்நிலையில் ,உலக சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இதுதொடர்பாக செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது சந்தைகளில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் உயர்ந்தது.
அதோடு அன்னிய முதலீட்டில் தொடர்ச்சியான வெளியேற்றம், உள்நாட்டு சந்தையில் உண்டான கடுமையான சரிவு போன்ற சாதகமற்ற சூழ்நிலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகை செய்து விட்டது என தெரிவித்திருக்கிறார்கள் .
வங்கிகளுக்கிடையிலான அந்நிய செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ரூபாயின் மதிப்பு 75.02 ஆக இருந்தது. இது பின்னர் 75.75 வரையில் வீழ்ச்சியைக் கண்டது. என தெரிவித்தார்கள்.
வர்த்தகத்தின் கடைசி கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 99 காசுகள் இழந்து 75.60 என நிலைத்திருந்தது என்று செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தார்கள்.
சர்வதேச சந்தைகளில் நேற்றைய தினம் நடந்த முன்பேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 8.36 சதவீதம் அதிகரித்தது 104.94 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.