உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான முதல் நாள் போரின் விளைவுகள் என்ன? முக்கிய நிகழ்வுகள் என்ன?

0
89

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தியது.இதனை கண்ட அமெரிக்கா உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை நிகழ்த்த போவதாக கூறியிருந்தது.

அமெரிக்காவின் கூற்றுப்படியே நேற்று காலை திடிரென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று தன்னுடைய ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்படி முதலில் ரஷ்யா தன்னுடைய சைபர் தாக்குதலை தொடங்கியது. அதன்டிப்படையில், அரசின் முக்கிய துறைகளின் கணினிகள் முடக்கப்பட்டனர் என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், ஐநா சபை தரப்பிலிருந்து ரஷ்யாவிற்கு ஒரு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது உக்ரைனை தாக்காமல் தங்களுடைய படைகளைத் தடுத்து நிறுத்துங்கள் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ரஷ்யாவிடம் ஐநா கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக புட்டின் அறிவித்திருந்தார். மேலும் இதில் யார் குறுக்கிட்டாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார் ரஷ்ய அதிபர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கொஞ்சமும் நியாயமற்றது என்று கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றத்தை தனித்து கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா அன்புடன் வேண்டுகோள் வைத்திருந்தது.

ஆனாலும் இதனை கண்டுகொள்ளாத ரஷ்யா உக்ரைனின் ஒடேசா, கார்கின் நகரங்களில் குண்டு வீச தொடங்கியது. மேலும் உக்ரேனின் விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குவதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்தது.

இதற்கிடையே ராணுவ சட்டத்தை அறிவித்த உக்ரைன் அதிபர் ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த நிலையில், உக்ரைனின் வான்பகுதியை அபாய பகுதியாக ஐரோப்பா அறிவித்தது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த சீனா இந்த விவகாரத்தில் தொடர்புடைய எல்லோரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அதேநேரம் உக்ரைனின் விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை தகர்த்து விட்டதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

உக்ரைனின் வான்பகுதியை ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க ராணுவ உதவி வழங்குமாறு உலகநாடுகளுக்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

அதோடு ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் அறிவித்தார். ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரையில் 40 பேர் பலியாகியிருப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தகவல் தெரிவித்திருக்கிறார்.