சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

0
175

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் ஆகியோர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தினார்கள்.

இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு கொண்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய்.

அதே நேரத்தில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை, இதனால் முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ளது. இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ள பூஜையில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 10,000 போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனிடையே சட்டநிபுணர்களின் சட்ட ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்று முடிவு செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநில அரசின் நிலைப்பாடு பற்றி பேட்டியளித்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அவர்கள்,. “சபரிமலைக்கு பெண்களை அழைத்து வர கேரள அரசு எந்த முயற்சியும் எடுக்காது எனவும் ஊக்கப்படுத்தவும் செய்யாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Previous articleவிராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்
Next articleஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்