வழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!!
நடப்பாண்டு நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிராக வழக்கம்போல் அதிரடியாக விளையாடி லைகா கோவை கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.
நேற்று அதாவது ஜூன் 19ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி கோவை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்தது.சேப்பாக் சூப்பர கில்லீஸ் அணியில் அதிகபட்சமாக ஹரிஸ் குமார் 32 ரன்களும், சசிதேவ் 23 ரன்களும் சேர்தனர்.பந்து வீச்சில் கோவை அணியில் யுதீஸ்வரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.எம் சித்தார்த், ஷாரூக் கான், மொகம்மது, சுப்ரமண்யன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 127 ரன்களை இலக்காகக் கொண்டு லைகா கோவை கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.தொடக்க வீரர் சச்சின் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் தொடக்க வீரர் சுரேஷ் குமார் அவருடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய சாய்சுதர்சன் அரைசதம் அடித்தார்.தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 64 ரன்கள் சேர்த்து கோவை அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் 16.3 ஓவர்களில் கோவை அணி 128 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சேப்பாக் அணியில் லோகேஸ் ராஜ், ராஹில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணியில் சிறப்பாக பந்துவீசிய யுதீஸ்வரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.