முச்சதம் அடித்த மற்றொரு இந்திய வீரர் ! கடும் காய்ச்சலிலும் தொடர்ந்து விளையாடிய தன்னம்பிக்கை !
ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த சர்பராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
மும்பை மற்றும் உத்திரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸே விளையாடின. முதலில் பேட் செய்த உ.பி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 625 ரன்களை சேர்த்தது. அந்த அணியைச் சேர்ந்த யு டி யாதவ் 203 ரன்களை சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு லாத் (98), கேப்டன் ஆதித்ய தாரே (97), முலானி (65) சேர்த்து சரிவில் இருந்து மீட்டனர். அதன் பின் வந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்து அசத்தினார். இதனால் மும்பை அணி 688 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்தது.
இதனால் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆனது. ஆட்டநாயகன் விருது பெற்ற சர்பராஸ் கான் ‘இரு நாட்களாக எனக்கு இருமலும் காய்ச்சலும் இருந்தது. அதனால் களத்தில் இருந்து வெளியேறி விடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் அவர்கள் எங்களை இரண்டு நாள் வெயிலில் பீல்ட் செய்ய வைத்ததைப் போல நானும் அவர்களை காக்க வைக்கவேண்டும் என எண்ணினேன். எப்போதும் நான் களத்தில் இருந்தால் என்னால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு’ எனக் கூறினார்.
சேவாக், கருன் நாயர் ஆகியோருக்கு அடுத்த படியாக இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.