சசிகலா முன்கூட்டியே விடுதலையா? கர்நாடக சிறைத்துறை கொடுத்த விளக்கம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே நன்னடத்தை அடிப்படையில் வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து உண்மையை அறிந்து கொள்ளும் வகையில் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக கர்நாடக சிறைத்துறையை நாடியுள்ளார்.இவருடைய மனுவுக்கு பதிலளித்துள்ள கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவின் தண்டனை காலத்தை கணக்கிடுவது குறித்து பல்வேறு நடைமுறைகள் உள்ளதாக கூறியுள்ளது. மேலும் சசிகலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய விடுதலை தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறையில் உள்ள சசிகலா வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.மேலும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை மூலமாக சசிகலாவுடன் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான் பாரதிய ஜனதா கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகியது போல சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து எந்தவிதமான பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.