சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மரக்கடை வியாபாரியான தந்தை ஜெயராஜ் என்பவரும் அவரது மகனான பென்னிக்ஸ் என்பவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து, முதல்கட்ட அறிக்கையில் தந்தை, மகன் இருவரும் லத்தியால் தாக்கப்பட்டு ரத்தம் சொட்ட உயிரிழந்துள்ளதால் கொலை வழக்குபதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவு அவரிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நேரடி சாட்சியான பெண் காவலர் ரேவதி அவரிடம் மீண்டும் விசாரணை, இறந்த ஜெயராஜ் அவர்களின் செல்போன் கடை, கோவில்பட்டி கிளை சிறை மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் கொண்டுவர சிபிசிஐடி விசாரணை குழு முடிவு செய்துள்ளது.