வைரஸ் பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பேர் இதனால் இந்தியாவில் பாதிப்படைகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் திடீரென்று நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவர் அந்த ஊசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்துவிட்டதாக ஒருசிலர் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள்.

ஆனால் சுகாதாரத் துறை சார்பாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது விவேக் உயிர் இழப்பிற்கும் தடுப்பூசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு முன்னரே நெஞ்சுவலி இருந்திருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறது சுகாதாரத்துறை. அதேவேளையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விவேக் மரணம் தொடர்பாக சர்ச்சையை கிளப்புபவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் தமிழ் நாட்டில் அதிகரித்துவரும் தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி வரும் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் எல்லாப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. அந்த சமயத்தில் தனியார் மற்றும் பொது போக்குவரத்து வாடகை ஆட்டோ அல்லது டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களை உபயோகம் செய்வது கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் காய்கறி மளிகை பொருட்கள் உட்பட அனைத்து கடைகளும் செயல்படக்கூடாது என்று தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், உள்பட எதுவுமே செயல்படாது என்று தெரிவித்திருக்கிறது மாநில அரசு.

அதேபோல ஞாயிற்றுக்கிழமை போடப்படும் ஊரடங்கில் பால், மருந்து கடைகள், மருத்துவமனை, உள்பட மிக அத்தியாவசிய தேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.