கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டுக் கடன், தனி நபர் கடன், பொருட்கள் கடன் என எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, RBIயுடன் ஆலோசித்து மூன்று மாதங்களுக்கு (மே 31 வரை) தவணை நீட்டிப்பை அறிவித்திருந்தது. அதன் படி மூன்று மாத காலம் பயனாளர்கள் கடன் செலுத்த வங்கிகள் நிர்ப்பந்திக்கக் கூடாது. ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு அசலில் இனைத்து அது மாத தவணையாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது நிச்சயம் வங்கிகளுக்கு சாதகமான அறிவிப்பு தான் என்றாலும், தங்களை நிதி சுமையிலிருந்து தற்காலிகமாகக் காத்து கொள்ள பயனாளர்களுக்கு ஓர் வடிகாலாக இருந்தது.
தற்போது நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலை நீடித்தது.
இதை கருத்தில் கொண்டும் இன்னும் மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கலாமா என RBI ஆலோசித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த் தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக ஏற்கனவே அறிவித்த தவணை அவகாச காலத்தை மேலும் மூன்று மாதம் நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதனால் EMI செலுத்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது EMI சலுகை என கூறப்பட்டாலும், தவணை செலுத்தாத அந்த கால கட்டத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு பயணர் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா வழக்கொன்றை தொடுத்தார் அதில் அவர் “முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்த போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி EMI செலுத்த மூன்று மாசம் அவகாசமளித்தது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அந்த அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் மொத்த கடன் நிலுவை தொகையுடன் கணக்கிடப்பட்ட வட்டி தொகை சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சலுகை என அறிவித்துவிட்ட தவனை செலுத்தாத காலகட்டத்திற்கு வட்டி கணக்கிட்டு வசூலிப்பது சட்டத்திற்கு விரோதமானது. ஊரடங்கால் ஏராளமான பொதுமக்கள் வேலை இழந்துள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை கூட்டு வட்டி போன்றது. இது அவர்கள் கடனை அதிகரித்து பாரமாக்கும். எனவே சலுகை அறிவிக்கப்பட்ட காலத்தில் வட்டியை வசூலிக்க நீதிமன்றம் தடை வதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு வார காலத்திற்குள் இதற்க்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.