விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார் உடனடியாக வகுப்பு ஆசிரியர் ஹேமலதா என்பவர் அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று உரையாடியிருக்கிறார். அப்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அந்த ஆசிரியையிடம் தெரிவித்து அழுதிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை இது தொடர்பாக உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார் அதன் பிறகு அவருடைய அறிவுரையின் பேரில் ஆசிரியை ஹேமலதா இதுதொடர்பாக விழுப்புரம் மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததுடன் மாணவியின் பெற்றோரை வரவழைத்து நடந்த சம்பவம் தொடர்பாக எடுத்துரைத்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது தன்னை கடந்த சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய தாய் மாமனான ராஜேந்திரன் மகன் சசிகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 9 பேர் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதிருக்கிறார்.
அதன்பிறகு இது தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் வழங்கினர். இதன்பேரில் சசிகுமார் மற்றும் மேலும் சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதாவது பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடலூரில் நேற்று முன்தினம் காதலன் கண் முன்னே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 வாலிபர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அந்த பரபரப்பு முடிவுக்கு வருவதற்குள் தற்சமயம் விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.