இன்றைய காலத்தில் காலையில் எழுந்தவுடன் இட்லி, பொங்கல், வடை என விதவிதமாக சாப்பிட்டு வருகிறோம். இன்னும் சிலர் அதாவது 2k கிட்ஸ்கள் பீட்சா, பர்கர் என சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், நம் முன்னோர்கள் அன்றாடம் விரும்பி உண்ட, உடல் நலத்தைப் பாதுகாத்த உணவு பழைய சோறு. உலகிலேயே மிக ஆரோக்கியமான ப்ரோபயோடிக் காலை உணவு என்று அமெரிக்கன் நியூட்ரிசன் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது பழைய சோறு.
தமிழர்கள் காலங்காலமாக உண்டு வரும் நீர் ஆகாரமான பழைய சோற்றில் மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும் மருத்துவ ஆற்றலும், வெயிலை எதிர்கொள்ள நமது உடலுக்கு தேவையான B12,B6 போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
பழைய சோறு கிடைக்க அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. இரவில் மிச்சமான சாதத்தில் நீரை ஊற்றி வைக்க வேண்டும். அது மறுநாள் காலையில் சாதம் நன்கு ஊறி நீர் நுரைத்த நிலையில் புளித்து இருக்கும். இது மனிதனுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட்களை கொண்டிருக்கும். இந்த பழைய சோற்றினை குடிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். குடல் புண், வயிற்றுப்புண் இருந்தால் குணமாகும். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அதிக நன்மையை தரும்.
மேலும் ரத்த அழுத்தத்தை சீராக இயங்க வைக்கும். இதனை குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்வாக இருக்கும். இதன் மூலம் சுறுசுறுப்பாக இயங்கலாம்.மண்பானையில் ஊற்றி வைத்தாலே போதும், காலை நேரத்தில் குளு குளு நீராகாரம் தயார். தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் நீராகாரம் பாரம்பர்ய உணவு என்பது குறிப்பிடத்தக்கது. நீராகாரத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் இருந்தால் போதும், சுவைக்கு கேட்கவே வேண்டாம்.
பழைய சோறு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் பழைய சோறு என்று சொல்லக்கூடிய நொதித்த சோற்றில் 200 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மூலக்கூறுகளும், ஏராளமான நல்ல பாக்டீரியாக்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மட்டுமல்ல ஏராளமான வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், மூளை நரம்புக்கு தேவையான மூலக்கூறுகளும் கூட இந்த பழைய சோற்றில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உடல் அலர்ஜி, குடல் புற்று நோய், அல்சர், உடல் உஷ்ணம், இதயம் சம்பந்தமான நோய்கள் ஆகிய அனைத்தையும் சரி செய்யக்கூடிய சத்துக்கள் இந்த பழைய சோற்றில் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நமது உடலை மினுமினுப்பாக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.