இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சற்றேறக்குறைய ஒரு மாத காலமாக இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. பல கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைகிறதோ அந்த கட்சி நிச்சயமாக மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. பொதுவான கருத்து என்று சொல்லப்பட்டாலும் கூட அதுவே உண்மையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பிற்பகலுக்கு பின் உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது எந்த கட்சி என்று தெரிய வந்து விடும்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 403 சட்டசபைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய வாக்குப்பதிவு மையங்களில் மத்திய ஆயுதப்படை காவல்துறையினர், மாநில காவல்துறையினர் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு நுழைவதற்கு முன்னதாக தீவிர சோதனை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
வாரணாசி கமிஷனரட் தொகுதி உட்பட 75 மாவட்டங்களிலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது மொரதாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.