காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?
காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு தைரியமான முடிவு என்று பெரும்பாலான மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த மாநில பிரிவினைக்கு தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக டெல்லியில் கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என்றும் பாராட்டியுள்ளனர். அது போல் நடிகர் கமலஹாசன் இந்த காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கும் என்று அதிமுக அரசை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கூறுகையில் காஷ்மீரை போல் தமிழகத்தையும் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் வடதமிழகம் தென் தமிழகம் என இரண்டாக பிரித்துவிடுவார்கள். புதுவை போல் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.