தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக – உடனடியாக இதை செய்ய சீமான் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்க! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்யாமல் காலம்தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் திமுக அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகச் சீரமைப்புச் செய்யப்பட்ட பின், அதன்கீழ் இயங்கிவரும் நான்கு கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயந்துள்ள நிலையில், ஊழியர்களுக்கான பணியிடங்கள் மட்டும் இன்றுவரை உயர்த்தப்படாமல், 1996 ஆம் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் அளவிலேயே உள்ளது.
இதனால், கடந்து 20 ஆண்டுகளாகத் தொகுப்பூதியம் அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்குப் பணிப்பயன், பணப்பயன் உள்ளிட்ட எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஊழியர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு, பணிநிரந்தரம் செய்வதே ஒரே தீர்வு என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களைக் கடந்த பல ஆண்டுகளாக முன்னெடுத்தபோதும் மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் இதுவரை அவர்களைக் கண்டுகொள்ளாது காலங்கடத்தி ஏமாற்றி வருவது பெருங்கொடுமையாகும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பல்கலைக்கழகத் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது பல்கலைக்கழக ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகமாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பெருமக்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் வழங்கப்படுவதுடன், புதிதாக 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறிவருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
https://twitter.com/SeemanOfficial/status/1562682978702344193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562682978702344193%7Ctwgr%5Eb811eab0e46aaa67c04e30fa4a13a550d071a69c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Ftemporary-employees-of-anna-university-should-be-made-permanent-seeman%2F
ஆகவே, தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் அனைத்துவகைத் தற்காலிக பணியாளர்களையும் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்து அவர்களது நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.