அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்க கோரி பாமக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மருத்துவ படிப்புக்களில் தற்போது அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு பின்பற்றப்படும் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐயும் தீர்மானிக்க வேண்டும். மேலும் மருத்துவ படிப்புகளில் வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க வேன்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உயர்நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்!
சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) July 27, 2020
இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்! சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்